×

தூத்துக்குடியில் வரத்து அதிகரிப்பால் வாழை இலை விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

ஸ்பிக்நகர்: வரத்து அதிகரிப்பால் தூத்துக்குடி மார்க்கெட், கமிஷன் கடைகளில் வாழை இலை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கோரம்பள்ளம், அத்திமரப்பட்டி, காலாங்கரை, குலையன்கரிசல், சிவத்தையாபுரம், பழையகாயல், முக்காணி, ஏரல், ஆத்தூர், ஆறுமுகநேரி உள்ளிட்ட பல இடங்களில் வாழை சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது. இப்பகுதியில் நாடு, சக்கை, ரசகசலி, ஏத்தம் உள்ளிட்ட வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. பொதுவாக வாழைக்காய்களுக்கு விலை கிடைக்கவில்லை என்றால், விவசாயிகள் இலைகளை அறுத்து விற்பனை செய்வர்.

நடவு செய்த 8 மாதத்தில் வாழைத்தார் வரும். 10வது மாதத்தில் பக்கவாட்டு கன்றுகளில் உள்ள இலைகளை அறுத்து விற்பனை செய்யலாம். ஒரு வாழை இலை கட்டுக்கு 40 மடி இருக்கும். ஒரு மடிக்கு 5 இலை வீதம், கட்டுக்கு 200 இலைகள் இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வாழை இலைகளை அறுத்து தூத்துக்குடி மார்க்கெட் மற்றும் கமிஷன் கடைகளில் விற்பனை செய்வர். அங்கிருந்து தூத்துக்குடி மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கும் சென்னை, திருநெல்வெலி, திருச்சி ஆகிய நகரங்களுக்கும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வாழை இலை ஒரு கட்டு ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தூத்துக்குடி மார்க்கெட் மற்றும் கமிஷன் கடைகளுக்கு வாழை இலை வரத்து அதிகரித்துள்ளதாலும், முகூர்த்த சீசன் இல்லாததாலும் ஒரு கட்டு ரூ.600க்கு விற்பனையாகிறது. ரூ.1000 வரை விலை போன மீடியம் சைஸ் கட்டு தற்போது ரூ.250 முதல் 300 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அத்திமரப்பட்டி விவசாயி கோயில்பிச்சை கூறுகையில், ‘கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான வறட்சி காரணமாக விவசாயத்தில் எந்தவித லாபமும் எடுக்க முடியவில்லை. ஆனால் இந்த வருடம் நன்றாக தண்ணீர் இருந்ததால் வாழைகள் நன்றாக வளர்ந்தது. ஆனால், ரூ.500க்கு விற்ற தார்கள் ரூ.100க்கு தான் விலை போனது. இதனால் வாழை இலைகளை விற்றாவது செலவு செய்ததை எடுக்கலாம் என்று நினைத்தால் வாழை இலை கட்டுகளின் விலை அறுப்பு கூலி, வண்டி வாடகைக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thoothukudi, Varuna, banana leaf, price, farmers worry
× RELATED வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்...